Monday, 31 August 2009

மிச்சம்..!

அறுவடை
முடிந்த
வயல்வெளியாய்
மனது.......
மீந்திருக்கும்
கதிரின்
மிச்சமென - உன்
நினைவு.

Sunday, 30 August 2009

வாசம்..!


தன் வாசனையை
என்னிடமே
விட்டுப் போயிருந்தாள்,
ஒரு மணிநேர
பயணத்தில் - என்
மடியில்
அமர்ந்து சென்ற
சிறகில்லா
சின்னஞ்சிறு
தேவதை.
.

Saturday, 29 August 2009

முள்..!


நெடுநாள் பின்
நள்ளிரவின் தரிசனம்.
உறக்கமின்றி
உருண்டு புரள்கையில்
படுக்கையில்
முள்ளாய்
உன் நினைவு


.

நினைவுறுத்தல்..!


உனை
நினைவுறுத்தவும்,
உன் பெயர்
கூறுவதற்கும்,
என்னில்
வார்த்தையும்,
எண்ணங்களும்
மட்டுமல்ல.
கைகளில் வளையல்,
கால்களில் கொலுசு,
காதினில் ஜிமிக்கி,
கண்களில் கனவு,
விரல் நுனியில்
கவிதை..

Thursday, 27 August 2009

வழியெங்கும்...

வழியெங்கும்
உன் முகம் தேடி
அலைகின்றதென்
பார்வை!
உயிர் தீண்டும் - உன்
பார்வைக்கென
பரிதவிக்கும் - என்
உள்ளம்!
உனைச் சேராமல்
இதழ்களில்
தேங்கி நிற்கும்
என் முத்தம்!
உன் செவி
உணருமோ - என்
உயிர் துடிக்கும்
சத்தம்!

பயணங்கள்


நீயில்லாத
பயணங்கள்
நிலவில்லாத
வானமாகிறது!

ஒரு வழிப்பாதை..!


என்
எண்ண ஏட்டில்
உனக்கான பக்கங்கள்
வெற்றிடமாகவே
இப்போதும்
எப்போதும்.
என் மீதான
உனது அபிப்ராயம்
ஒற்றையடிப்
பாதையல்ல,
ஒரு வழிப்பாதை


.

Wednesday, 26 August 2009

மரணத்தினும் கொடிது..!

பகிர்தலுக்கு
ஏதுமின்றிப் போக
மௌனத்தால் உரையாடுகிறாய்.
மரணத்தினும்
கொடியதாம் பிரிவு
பிரிவினும் வலிது
உன் மௌனம்.
உனக்கான
என் வார்த்தைகளை
உனக்குள்ளேயே
தொலைத்துவிட்டு
நானும்
மௌனத்தில்
மூழ்குகிறேன்.

Tuesday, 25 August 2009

பாராமுகம்..!


உன் பாராமுகம்
பார்த்து
பதறுகிறேன் நான்
உன் மௌனத்தினால்
எனைச்
சிதைக்கிறாய் நீ
சோக சமுத்திரத்தின்
நடுவில் நான்
கரையின்
வெளிச்சமென
உன் புன்னகை
சுடுமணல்
பாலையில்
வெற்றுகால்களுடன்
நான்
வெந்துபோன
பாதத்தின்
வேதனை
மாற்றும்
சோலையாய் நீ
தூறலுக்கு
தவமிருக்கும்
தரிசு நிலமென
நான்
தாகம் தீர்க்கும்
தண் மழையென
நீ.

தினம் தினம் வருவேன் நான்!..!

உறக்கமில்லா
இரவினிலே,
மொட்டைமாடி
தனிமையிலே,
நட்சத்திரம்
எண்ணுவதாய்
உனைத்தான்
எண்ணியிருப்பேன்!
காற்றோடு
காற்றாக
கருங்குயிலின்
பாட்டாக,
உள்வாங்கும்
மூச்சாக
உன்னுள்ளே
கரைந்திருப்பேன்!
உறக்கத்தில்
கனவாக,
உணர்வினில்
சுடராக,
வழியோடு
துணையாக,
நீங்காது - உன்
நினைவாயிருப்பேன்!
விழியோடு
ஒளியாக,
உடலோடு
உயிராக,
உன்னோடு
நானிருப்பேன்!
இலக்கின்
பாதையாக,
பாதையின்
நிழலாக,
நிழலின்
சுகமாக
உனக்காக
என்றும் நான்!
தாலாட்டும்
தாயாக,
தூங்கும் நேரம்
மடியாக,
துயில் கலைக்கும்
விடியலாக
தினம் தினம்
வருவேன் நான்!

கற்பூரம்..!

கண்களறியாமல்
காற்றில் கரையும்
கற்பூரம்....
உன்னிடம் பேசுவதற்காய்
சேமித்த சொற்கள்!
வெம்மையில் விழுந்த
வெண்பனி துண்டம்.....
உன்னுடன் கழித்த
உன்னத நொடிகள்!

Monday, 24 August 2009

வெளிச்சத்தில் தேடி..!


இருட்டில்
தொலைத்துவிட்ட
உன்னை
வெளிச்சத்தில்
தேடித் திரிந்து
தவிக்கிறேன்!

இழப்பு..!


கடல் அலையும்,
கடற்கரை மணலும்,
நினைவுறுத்துகிறது
உன் அருகாமையின்
இழப்பினை.......!

அறிவிப்பு..!
பின்பனி காலம்...
அதிகாலை......
கண்காணா தூரத்தில்
ஒற்றைகுயில்.....
தொட்டுவிடும் தொலைவில்
வெயில்


.
எனது
உற்சாகம் உனையும்
பூக்கச் செய்வதாய்
கூறினாய்....
எனது
மௌனம் உனை
மரிக்கச் செய்வதாய்
மறுகினாய்...
எனது
பார்வை உனை
பலவீனமாக்குவதாய்
பதறினாய்....
எனது
வார்த்தைகள்
மனதின் காயங்களுக்கு
மருந்தென கூறி
மகிழ்ந்தாய்...
உனது பிரிவு
எனது
மரண சாசனமென - ஏனோ
மறந்துவிட்டாய்!

Saturday, 22 August 2009

எப்போது படித்தாலும் பத்து வருடங்கள் பின்னோக்கி இழுத்து செல்கிறது எனது இந்த கவிதை(?)

பிரிவு

போகத்தான் வேண்டும்
பிறந்ததிலிருந்து பிரியாதிருந்த
சொந்த மண் விட்டு
போகத்தான் வேண்டும்!
கரியமிலம் கலந்திருந்தபோதும்
சுதந்திரம் தரும்
சொந்த ஊர் சுவாசக் காற்றைவிட்டு
போகத்தான் வேண்டும்!
மனதினில் சுமந்து மகளென
வரித்துக் கொண்டுவிட்ட
மலர்முக தங்கையை விட்டு
போகத்தான் வேண்டும்!
கூடி குலவி நின்று
கொட்டங்கள் பல அடித்த
நண்பர் குழாம் விட்டு
போகத்தான் வேண்டும்!
கெண்டைக் கயலாடும் - என்
மனதோடு உறவாடும்
கோவில் தெப்பக் குளம் விட்டு
போகத்தான் வேண்டும்!
துன்பத்தில் தோள் கொடுத்த
இன்பத்தில் பங்கெடுத்த
இஷ்ட தெய்வம் தனை விட்டு
போகத்தான் வேண்டும்!
விடுமுறை மாலைகளில்
விளையாட்டாய் வலம் வந்த
தேர் வீதி தனை விட்டு
போகத்தான் வேண்டும்!
சகோதரர்கள் பலரிருக்க
சகோதரிகளும் கணக்கற்றிருக்க
கன்னி நான் மட்டும்
போகத்தான் வேண்டும்!
உள்ளாடும் காதலை ஒழித்து,
இதயத்தின் ஏமாற்றத்தை மறைத்து,
இதழ்களில் புன்னகையை ஒட்டவைக்கும்
என் இனிய நண்பனே
உனை விட்டும்
போகத்தான் வேண்டும்!
12 வருடங்களின் பின்னர் அரங்கேறும் எனது தவிப்பு!

தனிமையே
சுகம் சொர்க்கமென
புலம்பியதெல்லாம்
பொய்யாகிபோனதின்று!
தனிமையில் கழிந்த
ஒவ்வொரு நொடியிலும்
உயிர் வலி கண்டது!
என் செல்லமே.....
பயிற்சி வகுப்பிற்கு
உன்னை அனுப்பிவிட்டு,
பாதை பார்த்து
பாவை - என்
பார்வை பூத்ததடி!
மகளென மனப்பூர்வமாய்
வரித்துக் கொண்ட பின்னும்
மடத்தனமாய்
கொட்டிவிடும் வார்த்தைகள்
தனிமையில்தான்
எனை நாராய்க்
கிழித்துப் போடும்!
போதுமடி பெண்ணே,
பொசுக்கென்று ஓடிவந்து
என் கழுத்தைக் கட்டிக்கொண்டு
காதோரம் பூவிதழ் மலர்ந்து
'அம்மா' என வேண்டாம்
'அக்கா' என
ஒருமுறை சொல்லி சென்றால்
உயிர் கொஞ்சம் மலர்வேன்!
இரவின் மொழி மௌனம்,
உன் மொழியும்தான்
எனைத் தவிர
எவருக்கும் புரிவதில்லை
என்னை எனக்கு
உணர்த்திவிட்டு
சப்த சமுத்திரத்தில் -நீ
காணாமல் போய்விட்டாய்
இரவின் மொழியை
மீண்டும் மீண்டும்
கேட்டபோதும்
உன் குரல் மட்டும்
ஒலிக்கவேயில்லை
உன் மொழி தேடும்போதினில்
நிசப்தமான மனதில் கூட
அலைகளின் ஆரவாரம்
உன் மௌனத்தில் நான்
பல்லாயிரம் பாடல் கேட்கிறேன்
நம்முடைய ராஜ்ஜியத்தில் நீ
மௌனமாய் என்னுடன் பேசுகிறாய்
உன் மௌனமே எனைத்
துயிலச் செய்யும் தாலாட்டாகிறது
அதுவே எனைத் துயிலெழுப்பும்
பறவைகள் ரீங்காரமாகிறது
இரைச்சல் அலைதனில்
தத்தளிக்கையில்
கரை சேர்க்கும் தோணியுமாகிறது
.
உன் நினைவால்
தவிக்கும் போதெல்லாம்
எனக்குள்
கண்ணீர் மட்டுமல்ல,
கவிதையும்
ஊற்றெடுக்கும்!
உனது வரவினுக்காய்
வாசலை பார்த்தபடியே
கழிகிறது வாழ்க்கை....
உனது வார்த்தைக்காய்
காத்திருந்தபடியே
நகர்கின்றன நாட்கள்!
குழந்தையென மாறி
குதூகலிக்கிறது
மனது.....
கொட்டுகிறது மழை.
சோம்பலுடனும் -சிறு
சோகத்துடனும்
கழிகிறது
உனைக் காணாத
பொழுதுகள்
.

Friday, 21 August 2009

ஊரெங்கும்
அலைந்து
திரிந்து
ஓய்ந்த
வேளையில்
உன்னிடத்தில்
மட்டுமே
நிலைகொள்ளும்
மனது!
ஆளற்ற வெளி.....
காலடியில் நிழல்.....
நினைவில் நீ!
கவிதையின்
இலக்கணம்
எதுவென
அறிந்ததில்லை....
எதுகை,
மோனை,
இயைபு
எதுவும்
தெரியாதெனக்கு....
இருந்தபோதும்
எழுதத்தூண்டியது
நமது காதல்


.
கவிதை....
தனிமை....
மழை....
மார்கழி பனி....
மெல்லிசை....
நீள்பயணம்....
நீயும்!.
இலைகள்
உதிர்ந்துவிட
தனிமையில்
நிற்கும் மரம்.....!.

Thursday, 20 August 2009

உயிரினில் கலந்த
உறவுகள்
உடனிருந்தும்,
நினைவினில் நிறைந்த
நண்பர்கள்
நீங்காதிருந்தும்,
மனம் மயக்கும்
மெல்லிசைதானிருந்தும்
நான் மட்டும்
தனித்திருக்கிறேன்
சின்னஞ்சிறு தீவினில்!.
கவிந்திருக்கும்
கோபத்தையும்
கணநேரப்
புன்னகையில்
கரைத்து விடுவான்...
வலிகள் தந்து - பின்
வசந்தமும் தருவான்...
சிறுசிறு சண்டைகளிட்டு
மனம் சிதறச் செய்வான்...
மனதின் ரணங்களை
மலர்கர வருடலினால்
மரிக்கச் செய்வான்...
அழ அழச் செய்து,
திரும்பி வந்து
பின்கழுத்தை
கட்டிக்கொண்டு
காதோரமாய் சொல்வான்
'I LOVE YOU'
அம்மா!

Wednesday, 19 August 2009

உனைச்
சந்திக்கப்போவதான
எதிர்பார்ப்புடன்
தொடங்குகின்ற
தினங்கள்
ஏக்கத்துடனே
முடிவடைகின்றன!
பிடித்ததாய்
சமைத்தேன்....
பார்த்து பார்த்து
பசியாற்றினேன்...
விரும்பியதை
வேண்டும் முன்
தந்தேன்....
நள்ளிரவில்
கழுத்தை
கட்டிக்கொண்டு
தூங்கும்போதுதான்
யோசித்தேன்...
நாளையுடன்
விடுமுறை
முடிவதை
எப்படி சொல்வது....
விடுதியிலிருந்து
விடுமுறையில்
வீடு வந்த
தங்கையிடம்!
கன்னங்களில்
உருண்டோடும்
கண்ணீர்த்துளிகளில்
தொக்கி நிற்கிறது
உனக்கான
என் வார்த்தை....
எனை நோக்கி
வீசப்படும் - உன்
அலட்சிய பார்வையில்
வலி கொள்கிறது
வாழ்க்கை!

Tuesday, 11 August 2009

அரவம் மிகுந்த
சாலையில்
அனைவரும்
பார்க்க
டாட்டா காட்டிவிட்டு..
வெயிலுக்கு
இதமாய்
பறக்கும் முத்தத்தை
வீசி சென்றான்...
சில அடிதூரம்
சென்று
திரும்பிப் பார்த்தேன்..
கூடுதலாய்
குறும்பு
புன்னகையையும்
பரிசளித்துச்
சென்றான்...
அம்மாவின்
தோளில் சாய்ந்தபடி!.

Sunday, 9 August 2009

அலுவலகத்தில்
அங்கங்கே
காணப்படும்
rubber stamp ன்
முத்திரைகள்...

அலுவலக
computer ன்
MS Paint ல்
வரைவதாய்
அள்ளி தெளித்துப் போன
வண்ணகலவை...

கடைகளில்
கண்ணாடி பாட்டிலுக்குள்
சிறையிருக்கும்
Five Star Chocalate.....

படுக்கையறையின்
மூலையில் கிடக்கும்
Carrom Board...

பக்கத்து வீட்டின்
கண்ணாடித் தொட்டிக்குள்
நீந்திக் கொண்டிருக்கும்
வண்ண மீன்கள்.....

video Game
பெட்டிக்குள்
சுற்றி வரும்
Car Race
விளையாட்டுடன்
Cartoon விளையாட்டுக்கள்...

அனைத்தும்
அனுதினமும்
நினைவுறுத்துகின்றன
சித்தியான என்னை
"அக்கா" என்றழைத்த
தர்ஷினி குட்டியை!

Saturday, 8 August 2009

இயல்பினை
இழந்து தவிக்கும்
எனைப்
பார்த்து
பரிகசித்தபடி
எனது
சுயத்தினைக்
கொன்றுவிட்டு
தனது
இருப்பினை
பதிவு செய்கிறது
இந்த காதல்!
எளிதெனில் எளிதே!
எளிதாய்
சொல்லிவிட்டாய்
"எனது விலகலுக்காய்
வருந்தாதே....."
கரம்பற்றியபடி
கதை பேசியிருந்ததும்....
மடியில் தலைசாய்த்து
துயில் கொண்டதும்.....
துயரம் கொள்கையில்
தோள்களை நனைத்ததும்....
கடற்கரைவெளியில்
காலடிகள் பதித்ததும்.....
நிலவொளியில்
கவிதைகள் வாசித்ததும்....
மழைச்சாரல் நனைக்க
ஒற்றைகுடை பிடித்து
நடந்ததும்.....
பேருந்தின் நெரிசலுக்குள்
உன் வாசம் நானும்
என் வாசம் நீயும்
உணர்ந்ததும்....
இவையனைத்தையும்
மறப்பது எளிதானால்
எளிதுதான்
உனது விலகலை
ஏற்பதும்!
அமாவாசை
தினத்திலும்
நிலவின்
தண்மையை
சுகித்திருக்கிறேன்
உனது
கரம் பற்றியபடி...
சாலையோரத்தில்
கிடந்த
ரப்பர் பொம்மை
உணர்த்தியது,
அதைத்
தவறவிட்ட
குழந்தையின்
வலியை...
There was an error in this gadget