Friday, 25 September 2009

இன்றும் மழை நாள்தான்..!


ஒரு மழை நாளில்
சந்தடி ஏதுமற்ற
சாலையில்தான் எனைக்
கடந்து சென்றாய் ......!

என் மனதினுக்கும்
உன் மனதினுக்கும்
மழை பாலமானது.....!

பார்வை மட்டுமே
பாஷை என்றிருந்து - பின்
புன்னகை கூட மொழியானது....!

சிறு சிறு வார்த்தைகள்
சினேகம் வளர்க்க,

நட்பின் தென்றல் தீண்டி - நம்
நேசம் மலர்ந்தது.........!

உனதன்பை வெளிப்படுத்திய- அந்த
விநாடியிலிருந்துதான்
உன்னை நேசித்த நான்
மழையையும் நேசித்தேன்.....!

உன்னுடன் கரம் கோர்த்து
நனைந்தபடி நடந்து சென்ற
மழை நாள் இன்னமும்
மனதினுள் ஈரமாகவே........!

இப்போதும்....
மழையின் தூறலைத்
தீண்டும்போது கூட - உன்
கரம்பற்றுவதான உணர்வு....!

மழையும் நம்மிருவருடன்
வாழ்வின் அங்கமாயிற்று...!

இன்றும் மழை நாள்தான்
.....!

மழையில் நனைந்தபடி நானும்
என்னுள் கரைந்தபடி மழையும்...!

நீ மட்டுமில்லாத தனிமையில்
.......?

Wednesday, 23 September 2009

வலியும் வலிமையும்


உயிரையே சுட்ட போதும்
உனது சிறு சிறு விலகல்
அத்தியாவசியமே.
இடி தாங்கும் வலிமை பெற
அடி தாங்கி பழகுதல்
என்றும் நலமே.
"உறங்குதல் போலும் சாக்காடு"
வள்ளுவன் வாய்மொழி போல்
ஊடல் போலும் விலகலே.

Tuesday, 22 September 2009

பிள்ளைப்பருவம்

கிடைத்த காலம்
கொஞ்சமென்றாலும்
வாழ்ந்த பொழுதுகள்
அதிகம்தான்.......
முடிவில்
மனம் கனத்தாலும்
ஒன்றுமில்லாததாய்
வெறுமையான உணர்வு!
நிலைத்திருக்கும்
நிஜமில்லை,
கரைந்து விடும்
கானல்தான்....
ஆயினும்
போ(வே)கும் வரையிலும்
தித்திடும் எண்ணங்கள்!
விடுமுறை முடிந்து
பள்ளி செல்கையில்
முதுகில்
புத்தகச் சுமையோடு,
இனிமையான நாட்கள்
மனதிலும்........
வேலைக்குப் போகும்
இன்று வரையிலும்
அந்த
கோடைவசந்தம்
எனக்குப்
பிள்ளைப்பருவம்தான்!

Wednesday, 16 September 2009

அம்மாச்சி

எல்லா வீட்டிலும்
இருக்கக் கூடும் - ஒரு
கதை சொல்லி!
எங்கள் வீட்டிலும்
இருந்ததுண்டு.
மந்திர தந்திர
கதைகளில்
ஆர்வம் வளர்த்தவள்....
நிலாச் சோற்றின்
சுவை காட்டியவள்....
பெண்மையின் வரம்புகள்
அறிவுறுத்தியவள்....
தாய்மையின் அருமையை
உணர்த்தியவள்.....
அம்மாவுக்கு மட்டுமில்லாமல்
எனக்கும்
அம்மாவானவள்...
இருந்தவரையில்
இதமளித்ததில்லை நான்.....
ஏனோ இப்போது
தவிக்கின்றேன்....
கடைசியாய்
கொடுத்து போன
புடவையில்
அவள் வாசம்
உணர்கிறேன்!

Saturday, 12 September 2009

வாழ்வின் உயிர்


உண்பதுவும்
உடுப்பதுவுமே
இயந்திரத்தனமான
பின்னரும்......
உன் கரம் கோர்த்து
நடை பயின்ற
தடங்களும்,
உன் தோள் சாய்ந்து
கதை பேசிய
கணங்களின்
நினைவுகளுமே
மிஞ்சி நிற்கும்
வாழ்வினுக்கு
உயிரூட்டுகின்றன!

Wednesday, 9 September 2009

புரிதல் என்னும் இழை


வார்த்தைகள் மரித்துப் போக
வாய் மூடி மௌனியாகின்றோம்

உனது தரப்பை நீயும்
எனது தரப்பை நானும்
மௌனத்தால் வாதிடுகிறோம்

'சாப்பிட்டாச்சா?'

'கடைக்கு கிளம்பியாச்சா?'

'தலைவலி சரியாகிடுச்சா?'

வந்து விழுகின்றன
கேள்விகள்
சம்பிரதாயமாய்...

புரிதல் என்னும்
இழைதான்
இழுத்து நிறுத்துகிறது,
எதிரெதிர் துருவங்களை
நோக்கி நகர்கின்ற
நம்மையும்
நம் நட்பினையும்!

Monday, 7 September 2009

தேவதை


மற்றவர்
மனதை
புரிந்து கொள்ளும்
தேவதை உள்ளம்
சில நேரங்களில்தான்
வாய்க்கப்பெற்றிருக்கிறது
எனக்கு.

ஞாபகங்கள்

உனக்கான
ஞாபகங்கள்
காணாமல்
போய்க் கொண்டிருக்கின்றன...
உன் ஞாபகத்தைத்
தவிர!

Friday, 4 September 2009

சில கூடுகளும் - ஒரு கூண்டும்

இருபது நாள்
வெளியூர் பயணத்தில்
இழந்திருந்தேன்
தோழர்களை.
கூடுகளிருந்த
இடத்தில் நிற்கிறது
செங்கற்களாலான ஒரு
கூண்டு.
.

Thursday, 3 September 2009

கண்ணாடி நட்பு
கை நழுவிய
கண்ணாடி
குடுவையென
சிதறிய நட்பினை
சேர்த்தெடுத்து
ஒட்டிவைக்கிறேன்.
இருந்தபோதும்
பசையின்
அடையாளமாய் - என்
மனதின்
தழும்புகள்.


.

Wednesday, 2 September 2009

தோழன்

விளக்குகளற்ற
வெளியில்
தனியாய்
சென்றுகொண்டிருந்தேன்....
வீடு வரையில்
கதை பேசியபடி
துணையாய்
வந்தது நிலா.

Tuesday, 1 September 2009

இயல்பு

எனதியல்பினில்
நிலைக்கவே
முயல்கிறேன்.
இயல்பினை
இடறித்
தடம் புரட்டி
செல்கிறாய் நீ.
.

பசுமை


தரையில் எழும்
பச்சை நிற அலைகள்......
அசைந்தாடும் வயல்வெளி


.

மௌனம் போதும்..!

கண் முன்னே
காதலைச்
சிதைக்கும்
வார்த்தையாடல்களினை
விடவும்.
நினைவுகளின்
துணையுடன்
வாழ்வினுக்கு
உயிரூட்டும்
நம் மௌனம்
போதும் நமக்கு


.

உனதுறவு

எனது
பலமும்
பலவீனமும்.....!
எனக்கான
வரமும்
சாபமும்.....!
என்
புன்னகையும்
கண்ணீரும்.....!
எனது
ஜனனமும்
மரணமும்.....!