Friday, 18 December 2009

ஒன்றா? இரண்டா?


"பெடம்மா (பெரியம்மா)
அத புடி"
காதினில் விழுகிறது - எனது
சின்னஞ்சிறு தேவனின் குரல்,
நடந்து செல்லும் என்னை
கடந்து செல்கிறது ஒரு ஆட்டுக்குட்டி!

"குடு (குரு) phone ஐ எங்க?"
குட்டி நண்பனின்
கேள்வியாய் ஒலிக்கிறது,
செல்லிடபேசியின் மணியோசை!

"அம்மாதான் என் best friend"
என் பாலாவின்
வார்த்தைகளாய் விரிகிறது,
நண்பர்கள் தினத்தின்
குறுஞ்செய்தி வாழ்த்துகள்!

"பிச்சி பூ ன்னா
உனக்கு பைத்தியமாச்சே
அதான் வாங்கினேன்" - என்னும்
பூங்கொடி அத்தையின்
பிம்பம் தெரிகிறது,
நீர் நிறைந்து ஓடும்
தாமிரபரணியில்!

"யாரிடமும் அதீத
அன்பு கொள்ளாதே"
மனதின் குரல் கேட்கிறது,
நெருக்கமானவர்களையும்,
விருப்பமானவர்களின்
நெருக்கத்தினையும்
இழக்க நேரும்போதெல்லாம்!

"சில நேரங்களில் சில நிகழ்வுகள்"


(‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.)

Monday, 14 December 2009

புன்னகை வெளிச்சம்


ஜன்னல் வழியே
யானையை கண்டு
கை தட்டி சிரித்தாள்
சிறுமி
விசையை தட்டியதும்
அறையெங்கும் பரவும்
மின்விளக்கின் ஒளியென
இரயில் பெட்டியெங்கும்
பரவியது புன்னகை


.

Sunday, 6 December 2009

நானும் நீயும்


என் தனிமையில்
நிரம்பியிருப்பவை
மௌனமும்
கவிதையும்
மட்டுமல்ல,
நீ கூடத்தான்!
எனது வெறுமையில்
உடனிருப்பது
மெல்லிசை
மட்டுமல்ல,
உன் நினைவுகளும்தான்!

Wednesday, 2 December 2009

நீலவானம்


குழந்தைகளிடமிருந்து
பெற்றுக்கொண்ட
மகிழ்ச்சியை
அம்மாக்களுக்காய்
விட்டுச் செல்கிறது
மழை.....
விடைபெற்று
போகுமொரு நாளின்
நீல வானத்தில்..........!