Thursday, 23 September 2010

நிராதரவான பசி





சற்று முன்னர்
விழுந்திருந்ததாலேயே
அதிகம் சேதப்படாதிருந்தது

இரண்டு இட்லிகளும்
கிருஷ்ணவேணி அத்தையை
நினைவூட்டும் சாம்பாருமாய்
சாலையில் கிடக்கும்
உணவுப் பொட்டலம்

சாலையைக் கடக்கும்
சிறுமிக்கு சொந்தமானதா?
ஆதரவென யாருமற்ற
தள்ளாடும் முதியவருடையதா

கனரக சக்கரங்களில் சிதையாமல்
அப்புறப்படுத்தலாமா?
சாலையோரத்தில் ஒண்டியிருக்கும்
பிரக்ஞையற்ற பாட்டியின்
பசியைத் தணிக்கலாமா?

சமூகம் குறித்த
அக்கறை ஏதுமின்றி
ஓடிச் சென்று
அள்ளி எடுத்து
என்னை விழுங்கிக்கொண்டிருக்கும்
பசிக்கு இரையாக்கலாமா?

மனதில் யோசனைகளுடன்
கடந்து செல்கிறேன்
இன்னும் பலரும்
கடந்து செல்லலாம்
ஏதேதோ எண்ணியவாறு

உணவுப் பொட்டலமோ
அங்கேயே கிடக்கிறது
முகமறியா ஜீவனின்
பசியை நினைவூட்டியபடி