Thursday, 28 October 2010

ஆலமும் அமிர்தமும்

துளி 4

'விலகிப் போய்விடு
என்னிலிருந்து'
என்றபடியே
துரத்திக் கொண்டிருக்கிறாய்

துளி 5

மௌனமென்னும்
மென்கத்தி கொண்டு
உயிரறுக்கும்
மிதவாதி நீ

துளி 6

ஒரே புன்னகைதான்
சிறையாகவும்
சிறகாகவும்



.

Monday, 25 October 2010

உணர்விருக்கை


பேருந்து நிறுத்த
சிமெண்ட் இருக்கையிடம்
இருக்கக் கூடும்
எண்ணற்ற கதைகள்

முக்கிய சாலையிலிருந்து
ஒதுங்கி நிற்கும்
கிராமத்து மாந்தர்களின்
நடைபயண குறிப்புகள்

சுமை தூக்கிகளாய்
பள்ளி செல்லும்
சின்னஞ் சிறுசுகளின்
கண்களில் மின்னும்
வண்ணக் கனவுகள்

'என் ஆளு வருவா
நீ போடா மாப்ள'
காத்திருக்கும்
இளவட்டங்களின்
இனிய அவஸ்தைகள்

ஜன சந்தடிகள்
ஏதுமற்ற போதுகளில்
தனிமையில் காயும்
நண்பகலின் வெறுமை

அடக்கி வைப்பார்
யாரும் இல்லாமல்
துள்ளி நடமிடும்
மேகக் குழந்தையின்
வியர்வைக் கதைகள்

கூடவே....

கூப்பிடு தூரத்தில்
இல்லாத நீ
அருகினில் அமர்ந்து
கைகோர்த்து பேசுகின்ற
பல கதைகளும்

.
வசனகவிதை புசித்து
பாட்டினை பருகி
கவிதையின் கைபிடித்து
காலம் கடக்க
பாரதியல்ல நான்
துரத்திப் பிடிக்கும்
துயரத்தின் கரங்கள்
நெரித்து செல்கின்றன
கவிதையின் கழுத்தையும்

.

Tuesday, 19 October 2010

இடைவெளி

அதிக வேலைப் பளுவின் காரணமாக அடிக்கடி நம் நண்பர்களை சந்திக்க இயலவில்லை. வாரம் இரு முறையேனும் சந்திக்க முயற்சிக்கிறேன்.

நன்றி நண்பர்களே.

நட்புடன்

கல்யாணி சுரேஷ்.