Thursday, 15 October 2009

ஒளியும் ஒலியும்


திருவிழா கடைகளில்
தொங்க விடப்பட்டிருக்கும்
அலங்கார மின் விளக்குகள்,
காதினில் ஒலிக்கிறது
என் குட்டி தேவனின்
சந்தோஷக் கூக்குரல்.





.

Tuesday, 13 October 2009

ப(ம)றந்து போன பச்ச கிளி

கண்ணுக்குள்ள
பொத்திவச்ச மவ
எங்கண்ண மறச்சுப்புட்டு
காணாம போயிபுட்டா

நெஞ்சுக் குழிக்குள்ள
நெருப்பள்ளி போட்டு
நெல கொலய வச்சுப்புட்டா

பதியம் போட்டு
பாத்து பாத்து வளர்த்த
பட்டு ரோசா
பூத்து சிரிக்கறத
பாக்க காத்திருந்தேன்
கண்ணசந்த வேளையில
களவு போனதென்ன?

பாலூட்டி வளர்த்த
எம் பச்ச கிளி
பொல்லாத பூனையோட
கை புடிச்சு போனதென்ன?

பாவி மவளுக்கு பந்த பாசம்
இல்லாம போனதென்ன?

பைத்தியம் புடிச்சதாட்டம்
நான் பரிதவிச்சு நிப்பதென்ன?



.

Friday, 9 October 2009

பகிர்ந்துகொண்ட விருது.




ராஜாராம் அண்ணா எனக்கு பகிர்ந்தளித்த இந்த விருதினை நான் இவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1. +ve அந்தோணிமுத்து - இனிய +VE அந்தோணி முத்து
2. வேல்கண்ணன் - வேல் கண்ணன்
3. கார்த்திகா - நேயமுகில்
4. சாம் தாத்தா - சாம் தாத்தாவின் சிந்தனைகள்
5. தமயந்தி - தமயந்தி - நிழல் வலை
6. வேல்ஜி---ஜெயபேரிகை
7. அருண் -
கார்ல்ஸ்பெர்க் வார்த்தைகள்
8. ஞானியார் ரசிகவ் - நிலவு நண்பன்

Thursday, 8 October 2009

11.10.09 தேதியிட்ட கல்கி இதழில் வெளியான எனது கவிதை.
நன்றி : கல்கி.


நடக்கும்போது
சுகமாய்த்தானிருந்தது,
உன் கரம் பற்றியிருந்தேன்...
ஏனோ
இப்போது
வலிக்கின்றன
கால்கள்,
தனிமையில் நான்!

Thursday, 1 October 2009

தவிக்கும் உயிர்.


சரமாரியாய்
தொடுக்கின்றாய்
விஷம் தோய்த்த உன்
வார்த்தைக் கணைகளை.
மழைக் கம்பிகளை
ஏந்துதல் போலும்
தாங்கிக் கொள்கிறேன் நான்.
அனுதினமும் எனை
அபிஷேக்கிறாய்
அனலேறிய உன் பார்வையால்.
நெருப்பினை விழுங்கிவிட்டு
நீரினைக் குடித்து
தணித்துக் கொள்கிறேன்.
சாவினைச் சுமந்தென்னை
துரத்துகின்ற
என்னிடமிருந்தான உன்
விலகலுக்கும்
வாழ்வினை நோக்கி எனை
இழுத்துச் செல்லும்
உன் மீதான என்
காதலுக்குமிடையில்
சிக்கித் தவிக்கிறது
எனது உயிர்.


.