Monday 23 August 2010

அன்புள்ள அண்ணா





அன்புள்ள அண்ணா
நலமா னு கேட்க வழியில்லை. இன்றைக்கு சகோதரர்கள் தினமாம். பெண்கள் தங்கள் சகோதரனுக்கு ராக்கி கட்டி, அவர்களின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்யும் நாளாம். நானும் உனக்காக வாழ்த்து அட்டையெல்லாம் வாங்கி விட்டேன். ஆனால் நீதான் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், முகவரியும் தராமல் நெருங்க முடியாத தொலைவிற்கு சென்றுவிட்டாய்.

உனது நீண்ட ஆயுளுக்கென வேண்டிக் கொள்ள வேண்டிய இந்த நாளில் உனது ஆன்ம சாந்திக்காக வேண்டிக் கொள்ளச் செய்த கடவுளை என்ன சொல்லி நொந்துகொள்வது?

எனது ஒவ்வொரு பதிவும் உனது கருத்தினைக் கேட்ட பின்பு பதிவிடப்படுவதே வழக்கம். இன்றைய எனது இந்த பதிவினை குறித்த கருத்தை நான் யாரிடம் போய் கேட்பது?

மாறாத அன்புடன்
கல்யாணி.

வலையுலக நண்பர்களே,
எனது இனிய சகோதரனும், நண்பனும், வழிகாட்டியும் எல்லாவற்றிற்கும் மேலாக எனது நலம் விரும்பியுமான சக பதிவர் திரு.நேர்மறை அந்தோணிமுத்து (http://positiveanthonytamil.blogspot.com/) அவர்கள் நேற்று இறையடி சேர்ந்துவிட்டார்கள். எனது சகோதரனின் ஆன்ம சாந்திக்காக இறைவனை வேண்டிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Saturday 7 August 2010

ஆலமும் அமிர்தமும்

துளி 1.

வேண்டியதெல்லாம் கேள்
கடவுள் சொன்னார்
ஒற்றை வரமாய்
பெற்று வந்தேன்
உன்னை மட்டும்.

துளி 2.

ஆர்ப்பரித்துக் கொட்டும்
அருவி போலும்
உன் காதல்.
மூச்சடைத்த போதும்
நனைந்து கொண்டேயிருக்கிறேன்
விலகாமல்.

துளி 3.

நீள்கின்றதான காலம்
சேமித்துக் கொண்டிருக்கிறது
முத்தங்களையும்
கண்ணீர்த் துளிகளையும்.

Sunday 1 August 2010

யெளவனம்.

இசையும்
கவிதையும்
குறித்ததான
நமது விவாதங்களில்
அன்றைக்கு இடம்பெற்றது
யெளவனம் குறித்ததோர்
உரையாடல்.

கட்டுடலும்
காதல் நிறைந்த
கண்களும்
கவர்ந்திழுக்கும்
புன்னகையும் கொண்டிருக்கும்
காதலின் நுழைவாயிலா
கேட்டேன்

நரைத்த பின்னும்
வெளிறிடாத நேசமும்
கருணை பொழியும்
விழிகளும்
நட்பினை உடுத்திருக்கும்
புன்னகையும்
மனங்களின் தொடுகையில்
சுகம் காணும்
முதுமை கூட
பதில் தந்தாய்
புன்னகை கலந்து.

இறுதியாக கூறினாய்
அன்பினில் சங்கமிப்பதே
யெளவனம்!