Thursday, 28 October 2010

ஆலமும் அமிர்தமும்

துளி 4

'விலகிப் போய்விடு
என்னிலிருந்து'
என்றபடியே
துரத்திக் கொண்டிருக்கிறாய்

துளி 5

மௌனமென்னும்
மென்கத்தி கொண்டு
உயிரறுக்கும்
மிதவாதி நீ

துளி 6

ஒரே புன்னகைதான்
சிறையாகவும்
சிறகாகவும்



.

Monday, 25 October 2010

உணர்விருக்கை


பேருந்து நிறுத்த
சிமெண்ட் இருக்கையிடம்
இருக்கக் கூடும்
எண்ணற்ற கதைகள்

முக்கிய சாலையிலிருந்து
ஒதுங்கி நிற்கும்
கிராமத்து மாந்தர்களின்
நடைபயண குறிப்புகள்

சுமை தூக்கிகளாய்
பள்ளி செல்லும்
சின்னஞ் சிறுசுகளின்
கண்களில் மின்னும்
வண்ணக் கனவுகள்

'என் ஆளு வருவா
நீ போடா மாப்ள'
காத்திருக்கும்
இளவட்டங்களின்
இனிய அவஸ்தைகள்

ஜன சந்தடிகள்
ஏதுமற்ற போதுகளில்
தனிமையில் காயும்
நண்பகலின் வெறுமை

அடக்கி வைப்பார்
யாரும் இல்லாமல்
துள்ளி நடமிடும்
மேகக் குழந்தையின்
வியர்வைக் கதைகள்

கூடவே....

கூப்பிடு தூரத்தில்
இல்லாத நீ
அருகினில் அமர்ந்து
கைகோர்த்து பேசுகின்ற
பல கதைகளும்

.
வசனகவிதை புசித்து
பாட்டினை பருகி
கவிதையின் கைபிடித்து
காலம் கடக்க
பாரதியல்ல நான்
துரத்திப் பிடிக்கும்
துயரத்தின் கரங்கள்
நெரித்து செல்கின்றன
கவிதையின் கழுத்தையும்

.

Tuesday, 19 October 2010

இடைவெளி

அதிக வேலைப் பளுவின் காரணமாக அடிக்கடி நம் நண்பர்களை சந்திக்க இயலவில்லை. வாரம் இரு முறையேனும் சந்திக்க முயற்சிக்கிறேன்.

நன்றி நண்பர்களே.

நட்புடன்

கல்யாணி சுரேஷ்.

Thursday, 23 September 2010

நிராதரவான பசி





சற்று முன்னர்
விழுந்திருந்ததாலேயே
அதிகம் சேதப்படாதிருந்தது

இரண்டு இட்லிகளும்
கிருஷ்ணவேணி அத்தையை
நினைவூட்டும் சாம்பாருமாய்
சாலையில் கிடக்கும்
உணவுப் பொட்டலம்

சாலையைக் கடக்கும்
சிறுமிக்கு சொந்தமானதா?
ஆதரவென யாருமற்ற
தள்ளாடும் முதியவருடையதா

கனரக சக்கரங்களில் சிதையாமல்
அப்புறப்படுத்தலாமா?
சாலையோரத்தில் ஒண்டியிருக்கும்
பிரக்ஞையற்ற பாட்டியின்
பசியைத் தணிக்கலாமா?

சமூகம் குறித்த
அக்கறை ஏதுமின்றி
ஓடிச் சென்று
அள்ளி எடுத்து
என்னை விழுங்கிக்கொண்டிருக்கும்
பசிக்கு இரையாக்கலாமா?

மனதில் யோசனைகளுடன்
கடந்து செல்கிறேன்
இன்னும் பலரும்
கடந்து செல்லலாம்
ஏதேதோ எண்ணியவாறு

உணவுப் பொட்டலமோ
அங்கேயே கிடக்கிறது
முகமறியா ஜீவனின்
பசியை நினைவூட்டியபடி


Monday, 23 August 2010

அன்புள்ள அண்ணா





அன்புள்ள அண்ணா
நலமா னு கேட்க வழியில்லை. இன்றைக்கு சகோதரர்கள் தினமாம். பெண்கள் தங்கள் சகோதரனுக்கு ராக்கி கட்டி, அவர்களின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்யும் நாளாம். நானும் உனக்காக வாழ்த்து அட்டையெல்லாம் வாங்கி விட்டேன். ஆனால் நீதான் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், முகவரியும் தராமல் நெருங்க முடியாத தொலைவிற்கு சென்றுவிட்டாய்.

உனது நீண்ட ஆயுளுக்கென வேண்டிக் கொள்ள வேண்டிய இந்த நாளில் உனது ஆன்ம சாந்திக்காக வேண்டிக் கொள்ளச் செய்த கடவுளை என்ன சொல்லி நொந்துகொள்வது?

எனது ஒவ்வொரு பதிவும் உனது கருத்தினைக் கேட்ட பின்பு பதிவிடப்படுவதே வழக்கம். இன்றைய எனது இந்த பதிவினை குறித்த கருத்தை நான் யாரிடம் போய் கேட்பது?

மாறாத அன்புடன்
கல்யாணி.

வலையுலக நண்பர்களே,
எனது இனிய சகோதரனும், நண்பனும், வழிகாட்டியும் எல்லாவற்றிற்கும் மேலாக எனது நலம் விரும்பியுமான சக பதிவர் திரு.நேர்மறை அந்தோணிமுத்து (http://positiveanthonytamil.blogspot.com/) அவர்கள் நேற்று இறையடி சேர்ந்துவிட்டார்கள். எனது சகோதரனின் ஆன்ம சாந்திக்காக இறைவனை வேண்டிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, 7 August 2010

ஆலமும் அமிர்தமும்

துளி 1.

வேண்டியதெல்லாம் கேள்
கடவுள் சொன்னார்
ஒற்றை வரமாய்
பெற்று வந்தேன்
உன்னை மட்டும்.

துளி 2.

ஆர்ப்பரித்துக் கொட்டும்
அருவி போலும்
உன் காதல்.
மூச்சடைத்த போதும்
நனைந்து கொண்டேயிருக்கிறேன்
விலகாமல்.

துளி 3.

நீள்கின்றதான காலம்
சேமித்துக் கொண்டிருக்கிறது
முத்தங்களையும்
கண்ணீர்த் துளிகளையும்.

Sunday, 1 August 2010

யெளவனம்.

இசையும்
கவிதையும்
குறித்ததான
நமது விவாதங்களில்
அன்றைக்கு இடம்பெற்றது
யெளவனம் குறித்ததோர்
உரையாடல்.

கட்டுடலும்
காதல் நிறைந்த
கண்களும்
கவர்ந்திழுக்கும்
புன்னகையும் கொண்டிருக்கும்
காதலின் நுழைவாயிலா
கேட்டேன்

நரைத்த பின்னும்
வெளிறிடாத நேசமும்
கருணை பொழியும்
விழிகளும்
நட்பினை உடுத்திருக்கும்
புன்னகையும்
மனங்களின் தொடுகையில்
சுகம் காணும்
முதுமை கூட
பதில் தந்தாய்
புன்னகை கலந்து.

இறுதியாக கூறினாய்
அன்பினில் சங்கமிப்பதே
யெளவனம்!

Tuesday, 27 July 2010

வழித்துணை

கூடவே வருகிறது
கிளம்பும் நேரத்தில்
கட்டிக் கொண்டு
விலக மறுத்த
ஹர்ஷிதா குட்டியின்
வாசனை.

.

Saturday, 22 May 2010

விடுதலை விரும்பி


தினம்தோறும் வாசலில்


ரங்கோலி கோலமிடுகிறாள்


வளைந்து நெளியும்


கோடுகளுக்குள்


புள்ளிகளை


சிறை வைக்க


விரும்பாமல்.

Monday, 3 May 2010

வானவில் தருணம்.


நீள்கின்ற மௌனக்கோடு
இயம்புகிறது
இருவருக்குமான இடைவெளியை

சிறைப்பட்டிருக்கும் வார்த்தைகளை
விடுவிப்பதற்கான சாவி
உன்னிடமிருப்பதாய் நானும்
என்னிடமிருப்பதாய் நீயும்
பாவனை செய்கிறோம்

சிறு விசும்பல்
அழிக்கக் கூடும்
மௌனக் கோட்டினை

ஒற்றைத் துளி
உடைக்கக் கூடும்
சிறைக் கதவுகளை

ஊடல் உடைபடுமொரு
வானவில் தருணத்திற்கென
காத்திருக்கிறோம் உள்ளபடியே.

.

சிலைகள்

உயிர் நீத்த
பின்னும்
சிறைக்குள்ளேயே
எம் தலைவர்கள்.

.

Friday, 23 April 2010

நீராலானது

கிழவியின்
வற்றிப்போன முலை
போலும்
பரந்து கிடக்கிறது
ஆற்றுவெளி
எங்களின்
கண்ணீர்த் தடங்களைப்
போலும்
நீண்டு கிடக்கின்றன
ஒற்றையடிப் பாதைகள்


.




.

Friday, 19 February 2010

நிலைக்கண்ணாடியின் பதில்கள்


நான் கேட்கும்
எல்லா கேள்விகளுக்கும்
பதிலளிக்கிறாய் சலிப்பேதுமின்றி,
என் வீட்டு
நிலைக்கண்ணாடியினுள்
இருந்தபடி...!


.

Monday, 15 February 2010

புன்னகை.

புத்தகத்தின் முதல்
பக்கத்தில் இருக்கும்
உன் பெயரை
மெல்ல வருடுகிறேன்
விரல்களில் உணர்கிறேன்
புன்னகையை.





.

Thursday, 7 January 2010

மழை அஞ்சல்


தூரத்தில்
பெய்கின்ற மழை
கொண்டு சேர்க்கிறது.....
நாசியில்
மண் வாசனையையும்
மனதில்
உன் நினைவுகளையும்




.

Monday, 4 January 2010

புன்னகைப் புதைகுழி!


உனக்கென நான்
கோர்த்து எடுத்து வரும்
சொற்களை - உன்
ஒற்றை புன்னகையாலேயே
மௌனத்தில்
புதைந்து
போகச் செய்கிறாய்!